லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை அங்கீகாரத்தை கேப்டன் விஜயகாந்த் கோயிலுக்கு வழங்கியுள்ளது.
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான திரு.விஜயகாந்த் அவர்கள்,ரசிகர்கள் மற்றும் தொண்டர்களாலும் செல்லமாக கேப்டன் என அழைக்கப்படுகிறார்.
கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் இவரது உண்மையான பெயர் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த்.இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்த விஜயகாந்த்,சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சித்தலைமையகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நாள் தோறும் ஏராளமான மக்கள் சென்று தரிசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ”125 நாட்களில் சுமார் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் வந்து தரிசித்ததை அங்கீகரிக்கும் வகையில், லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை அங்கீகாரத்தை கேப்டன் விஜயகாந்த் கோயிலுக்கு வழங்கியுள்ளது”. இதற்கான அங்கீகார சான்றிதழை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் குழுவினர் வழங்கினர்.