சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்று டன் குட்கா புகையிலை மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த மூன்று சொகுசு கார்கள் பறிமுதல்.கடத்தலில் ஈடுபட்ட நான்கு வடமாநில இளைஞர்ளை போலீசார் கைது செய்தனர் .
கடந்த சில மாதங்களில் தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. தற்போது, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வழியாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு ‘தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள்’ கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார், வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது,சந்தேகத்துக்கு இடமாக அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அடுத்தடுத்து மேலும் இரண்டு கார்கள் பிடித்து, காரை சோதனை செய்தனர்.
அப்போது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதும், அதன் மொத்த எடை சுமார் 3 டன் எனவும், அவைகளின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது.
மேலும்,போதை பொருள் கடத்துவதற்கு உதவியாக இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான மூன்று சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து,புகையிலையை கடந்தியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்குமார் (22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய நான்கு வட மாநில இளைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.அந்த 4 நபர்களையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து, இந்த கடத்தலுக்கு பின்னர் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.