அடுத்து வரும் ஆட்சியின் சிம்மாசனத்தில் அமரப்போவது யார் என்பதைத் தீர்மானிக்க போகும் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்பட்ட உள்ளது.
நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ள நிலையில்,அதற்கு முன்பாக மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்,தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை பற்றிய விதிகளும் அமலுக்கு வந்துவிடும்.அதேபோல ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுமார் 97 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். இதற்காக 12 லட்சத்திற்கும் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
மேலும்,மேற்கு வங்கத்தில் வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.