சென்னை மத்தவராத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யும் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உறுதிபடுத்தப்படுகிறது என்பது பெற்றோர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை.
இந்நிலையில் இதனை பயன்படுத்தி சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து, அந்தக் கடைக்கு அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் மாதவரத்தில் உள்ள கே.கே.ஆர். கார்டன் பகுதியில் புரோட்டின் விற்பனை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கடையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் போஸ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரும் அங்கு சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் தாய்ப்பாலை நன்கொடையாகப் பெற்று அதனை பதப்படுத்தி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 100 மில்லி தாய்ப்பால் 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்றதாகவும் கடையின் உரிமையாளர் முத்தையா தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் யார் யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது, எப்படி விற்பனை செய்யப்பட்டது போன்றவை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யும் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி,கடையில் இருந்து தாய்ப்பால் அடைக்கப்பட்ட பாட்டில்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும்,இதுபோல வேறு எங்கும் தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனவா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்காரர் மீது மாதவரம் காவல்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
மேற்கொண்டு மாநிலம் முழுவதும் இந்த சோதனை விரிவடைய உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.