மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை
மட்டுமே தழுவியது.புதுச்சேரி உட்பட எட்டு தொகுதிகளில் டெபாசிட் கூட பெறவில்லை.
அதுமட்டுமின்றி, மீதமுள்ள 32 தொகுதிகளில் ஒன்பது இடங்களில் மூன்றாம் இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது.
அதிமுகவிற்கு ஏற்பட்ட இந்த சறுக்கல் அக்கட்சி நிரவாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து கருத்து தெரிவித்தனர்.
இதுதவிர அதிமுக – பாஜக கருத்து மோதல்கள் என பல்வேறு முனையில் தாக்குதல்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, இதுவரை மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களும் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்டார்கள், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்களும் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்டார்கள்.
இதற்கு மத்தியில்தான் அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
பாஜக ஏதோ வளர்ந்து விட்டதைப் போல ஊடகங்களில் செய்தி வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் 18.80% வாக்குகள் பெற்றார்கள். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 18.28% வாக்குகள் பெற்றுள்ளனர். ஆக இப்போது குறைவாகத்தான் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
எனவே பாஜக வளரவில்லை. திமுக, கட்சியாகவும் கூட்டணியாகவும் 2019 ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட தற்போது பெற்ற வாக்கு சதவீதம் குறைவு தான்.
அதை தொடர்ந்து ,பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி பேசியதை குறித்து அவர் பேசும் போது ”அண்ணாமலை அதிமுகவை தொடர்ந்து விமர்சிக்கிறார் என்றால், நீங்கள் அவரைத்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து அவர் விலகி போய்விட்டார்.
அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் என்னவெல்லாமோ கனவு கண்டிருப்பார். கனவு நனவாகாததால் வெறுப்பில் வார்த்தைகளை உதிர்க்கிறார்.
அதிமுக கடந்த காலங்களில், காங்கிரஸ், பாஜக என தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தோம். வெற்றி பெறும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்றபின் மறந்துவிடுகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே தனித்துப் போட்டியிட்டோம். ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்போம். அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை” என தெரிவித்தார்.