கோவில் திருவிழாவில் ஆட்டு கிடாவை வெட்டி ரத்தம் குடித்ததால் கோவில் பூசாரி உயிரிழந்துள்ளார்.
கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார் .
இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால்,அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதை தொடர்ந்து,தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் கோவில் பணிகளில் பழனிச்சாமி தீவிரம் காட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில்,பழனிச்சாமி நேற்று கோவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பழனிச்சாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இதை அறிந்த சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து,போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோவில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர்கள் சாப்பிட்டதாகவும், சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆட்டு கிடாயை வெட்டி ரத்தத்தை குடித்ததால் கோவில் பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.