வாய்க்கால் தூர்வாரும் பொழுது மதில் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் தற்போது பல்வேறு பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமானுஜம் நகர் முதல் வசந்த் நகர் வரை மூன்றரை கோடி மதிப்பிலாக வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் 10 அடியில் உள்ள வாய்களை தூர்வாரும் பணியில், ஒப்பந்த அடிப்படையில் நபர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.பணியின் போது 10 அடி உயரம் கொண்ட மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த விபத்தில் குணசேகரன்,பாலமுருகன்,சீனிவாசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும்,6 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் கமல்ஹாசன்,ராஜேஷ்கண்ணன் என்ற மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து,விபத்தில் சிக்கியவர்களை துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ”இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த விபத்து குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினர், ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தது, அலட்சியமாக பாதுகாப்பு இன்றி செயல்பட்டது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”.என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி நகர்ப்பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் வாய்க்கால் சுவர் அமைக்க தூர்வாரிய போது புதியதாக கட்டிய மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது வாய்க்கால் தூர்வாரும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.